Monday, January 25, 2016

கள்ளச் சிரிப்பு

==================

பிரதான வீதியிலிருந்து பிடுங்கி
அடர்ந்த வனத்தில் வீசப்பட்டேன்.

பிரியத்தின் வாசனை மீது
அமிலம் பரவத் தொடங்கியது.

நிழல்களடர்ந்த எனது சாலையில் ...
நெருப்பின் தகிப்பு கவியத் தொடங்கியது.

மீள எத்தனித்தபோது
காலம்
ஒரு சாத்தானைப் போல கள்ளச் சிரிப்பு சிரித்தது.

பிறகு நான்
காலத்திற்கெதிரான வன்மத்தைப்
பருகத் தொடங்கினேன்.

பாதங்களை உதிர்த்துக் கொண்டேன்
விழிகளைப் பிடுங்கி வீசினேன்
உயிரை உருக்கும் ஒரு உன்னத இசைக்கு
செவிகளை மூடிக் கொண்டேன்...
இன்னும் நிறைய இதுபோல்.

பிரியத்தின் வாசனை பரவத் தொடங்கிவிட்ட
ஒரு மழை நாளில்
காலம் மீண்டும் கள்ளச் சிரிப்பு சிரித்தது.

எனது கோப்பையில்
அன்பை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.

அவனும் புளிப்பு முட்டாயும்

===========================


ஒரு காலத்தில் அவனுக்கு 
சில விருப்பங்கள் இருந்தன
சில கனவுகள் இருந்தன
சில ரசனைகளும் இருந்தன 
உண்மையாகவே 
சில திறமைகளும் இருந்தன...

முன்பொரு நாளில்
காலமற்ற ஒரு பொழுதில்
முடிவற்ற ஒரு சமவெளியில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வழித்தடத்தில்
நடக்க விருப்பம் கொண்டிருந்தான்.

ஒரு நிராகரிப்பில்
ஒரு புறக்கணிப்பில்
ஒரு பிரிவில்
ஒரு தகிப்பில்
ஒரு தழுவுதலில்
ஒரு துரோகத்தில்
ஒரு அலைகழிப்பில்
முணுமுணுக்கும்படியான
ஒரு கவிதையை எழுதிவிட முடியும்
என்ற கனவு இருந்தது அவனுக்கு.

அற்புதமான உலகத் திரைப்படங்களும்
ஆகச்சிறந்த புத்தகங்களும்
மகத்தான பாடல்களும்
அவன் சேகரிப்பில் இருந்தன...

காலம் ஒரு புல்லின் நுனி தூரம் கடந்துவிட்டது..

அவன் இப்போது…

கழுத்தில்
ஒரு MNC-யின் அடையாள அட்டையை
தாங்கிக் கொண்டிருக்கலாம்...
குழந்தையின் ஜட்டிக்கு
கிளிப் மாட்டிக் கொண்டிருக்கலாம்..
புறநகரில் ஒரு வீடோ மனையோ
வாங்கும்படியான நிர்பந்தத்தில்
அலைந்து கொண்டிருக்கலாம்
முடியாமல்
Facebook-ல் 
ஒரு கவிதையை post செய்து கொண்டிருக்கலாம்...

ஊருக்கு போவதற்காக
வெள்ளிகிழமை இரவுகளில்
ஆம்னி பஸ்களில் ticket கிடைக்குமா என
தாம்பரம் பேரூந்து நிறுத்தத்தில் அலைந்து கொண்டிருக்கலாம்...

விருப்பங்கள், கனவுகள், ரசனைகள்...

"அத வச்சிக்கிட்டு புளிப்பு முட்டாய் கூட 
வாங்க முடியாது"

Tuesday, October 21, 2008

மறதியும் அலுப்பும்



மழைக் காலங்களில் குடை மறந்து போவதற்காய் நானும்,

குடைக் காலங்களில் வர மறந்து போவதற்காய் மழையும்,

அலுத்துக் கொள்வதைப் போல,

எப்போதாவது பேச வாய்க்கிற தருணங்களில்

வார்த்தைகள் மறந்து போவதற்கு

நாம் ஏன் அலுத்துக் கொள்வதே இல்லை.

Thursday, August 28, 2008

எரித்த கேள்வி

பார்வதியுடனான பிணக்குகள் தீர்ந்து
மனம் குளிர்ந்திருந்த ஒரு பொழுதில்
வரம் கொடுக்க பூலோகம் வந்தார் சிவபெருமான்.

சந்தேக புத்தியுடைய மானிடன்
கடவுளை கடவுளென்று நம்ப மறுத்தான்.

வங்கிகடன் வாங்கிக் கொள்ளும்படி நிர்பந்திக்கிற
தொலைபேசி பெண்ணைப்போல
வரங்களை பெற்றுக்கொள்ளும்படி நிர்பந்தித்தார்.

"Bero pulling கொள்ளையன் தானே நீ" என்றது மானுட வர்க்கம்.

மறுக்கப்பட்ட வரங்களை பார்த்து
பரிகாசம் செய்தாள் பார்வதி.

கோபத்தில் கண்சிவந்த பரமன்
பிரபஞ்சம் அதிர தாண்டவம் ஆடினார்
பற்றி எரிந்தது பிரபஞ்சம்…
அண்ட சராசரங்களும் ஓலமிட்டன.

சகலமும், சகலரும் கருகும்படியாய்
தீயின் வெப்பத்தை அதிகபடுத்தினார் கடவுள்…

காயங்களோடு ஓடி வந்த குழந்தை கேட்டது…

"திருப்தியா?" "ஆம்" என்றார் சிவபெருமான்.

"நீ மிஞ்சி இருக்கும் பொது எல்லாவற்றையும்
அழித்துவிட்டதாய் எதற்கு இந்த ஆணவம்…
உன்னை நீ அழித்துக் கொள்ள முடியாமல்
நீ என்ன அழிக்கும் கடவுள்?".


Thursday, June 26, 2008

இனிய லோனா...


பருவகாலங்களைப் போலவே உறவுகளும்
கூவும் குயிலாய், அனல் காற்றாய், உறைய வைக்கும் குளிராய்
அது நம்மை கடந்து செல்கிறது.

கைவிடப்பட்ட உறவுகள் காற்றில் அலைகின்றன
பாலித்தின் கவர்களைப்போல.

சாஸ்வதமற்றவை மற்ற எதையும் போல.

மீண்டும் வர நேராத பயணிகளோடு

சென்று மறைகிற ஒரு ரயிலைப் போல
காலத்தில் உறைந்து போகிறது உறவு...

பொருள்சார் வாழ்வின் மரண நாவுகள்
உறவுகளைத்தான் விரும்பித் தீண்டுகின்றன.

லோனா,

நாம் பகிர்ந்து கொண்டதைவிட பகிராமல் விட்டது அநேகம்.

ஒரு சிலந்தி வலையின் நேர்த்தியோடும்,
ஒரு மைனாக்கூண்டின் அழகியலோடும்
அது இருக்கவில்லை,
எனினும் அது ஒரு நதியைப்போல் இயல்பானதாய் இருந்தது.

வார்த்தையும் வாழ்க்கையும் இன்னும் மிச்சமிருக்கிறது.
சந்திப்போம் தோழனே...





Friday, April 11, 2008

சமூகம்

துரோகம் வழியும் வார்த்தைகள்
சமூகத்தினுடையது.

உறங்கும்போது குறியறுத்துக்கொல்லும் குரூரமும்
சமூகத்தினுடையதுதான்.

சிசுக்களின் குருதி உறைந்த ஆடைகளை
அது தன் இருண்ட கிடங்குகளில்
வரிசைகிரமமாக அடுக்கி வைத்துக்கொள்கிறது.

சமூகம் எனப்படுவது யாதெனில்....

நாம்தான்.

Tuesday, February 5, 2008

வளைவுகள்



தவறான முடிவுகளிலிருந்து
சரியான தொடக்கத்தைஅடைந்துவிட்டோம்.
கற்பிதங்கள் கலைந்துபோன
அற்புதத் தருணம் இது.

மெல்ல மெல்ல
ஒரு வெற்றிடம்
அடர்ந்த காற்றழுத்த மண்டலமாகிவிட்டது.
மழையில் நனையக் காத்திருப்போம்.

இசைக் குறிப்புகளைப் பார்த்து
ஏன் மிரட்சி கொள்கிறாய்?
கண்மூடி ரசி, போதும்.
மேலும் சப்தங்களை வெறுக்காதே
ஒழுங்குபடுத்தப்பட்ட சப்தங்கள்தான் இசை.

மின்சாரக் கம்பிகளில் தொங்கும்
மைனாக்களின் கூடுதான் வாழ்க்கை.
சிக்கலான பல விஷயங்கள்
நேர்த்தியானவையும் கூட,
மைனாக்களின் கூட்டைப் போல.

நீ நினைப்பதைப் போல
எல்லா வளைவுகளும் முடிவுகள் அல்ல.
பயணித்துப் பார்ப்போம்.