Wednesday, April 25, 2007

நீ, நான் மற்றும் நாம்

பெயரற்ற இழைகளால்
சந்தர்ப்பம் பின்னிய வலையில்
நாம்
சிலந்தியா இரையா?
============
அகாலத்தின் இரவுகளில்
வெறிகொண்டலையும்
கறுப்பு நாயென
நமது வேட்கை.
============
ஒரு கணம் அறைந்து
மறுகணம் முத்தமிட்டுக் கொள்கிறோம்.
============
ஒரு முற்றுப்புள்ளியை நோக்கி
விரைகிறது
நம் வார்த்தைகளற்ற வாக்கியம்.
============
எனை எரிப்பதும்
பின்பு அணைப்பதும்
இதே கண்கள்தான்.
============
உன்னை சந்திக்காத நாளின்
இரவுகளில்
உன் ஞாபகங்களை
கட்டை விரலாக்கிச் சூப்பியபடி
உறங்கிப் போகிறேன்.
============
உன் வியர்வைத் துளிகளுக்காய்

காத்திருக்கிறார்கள்
அமுதத்தைப் புறக்கணித்த தேவர்கள்.
====================

நம் காதலின் மீது
சர்ப்பங்களென ஊரும்
விழிகளின் கூர்மை ஹிம்சிக்கிறது.
====================
பொருள்சார் உலகின்
அத்தனை அவஸ்தைகளும்
கனத்துக் கவிந்தும்
இடுக்குகளில் பூத்துக் குலுங்குகிறது
நம் காதல்.
====================

துயரத்தின் குறிப்புக்கள்

மரணத்தின் குழந்தை
போலும்
துயரங்கள்.

முதிராத சிறுமிக்கு
முதல் உதிரப்போக்குபோல
தொடக்கத்தில் பயமேற்படுத்தின
துயரங்கள்.

இப்போது
துயரமற்ற கணங்கள்
பீதி ஏற்படுத்துவதாய் இருக்கின்றன.

தொடக்கமும்
முடிவற்றதுமான
புதிர் வழித்தடங்களைப் போல
இருக்கின்றன
துயரத்தின் பாதைகள்.

கடந்துபோன துயரங்கள் அனைத்தும்
பிறருக்கானவை போலும்
ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

தவிர்க்க முடியாதவைகளின் பட்டியலில்
துயரங்கள்
பிரதான இடம் வகிக்கின்றன.

துயரமெழுதும் குறிப்புக்களில்
எவர் பெயரும் விடுபடுவதே இல்லை.

துயரத்தின் சாயல் படியாத
முகங்கள்
முகமூடி தரித்தவை.

துயரத்திற்கான
காரணங்களைப் பொறுத்து
சில கணங்களில் அவை
விரும்பத்தக்கதாயும் இருக்கின்றன.

துயரங்கள் நிதர்சனமானவை
முடிவற்றவையும் கூட....

வேட்கை

வேட்கையின்
ஒளிர்கின்ற கண்களுக்குப்
பயந்து
அகாலத்தின் புதர்களில்
ஒடுங்கிக் கொள்கிறது
மனசு.

Monday, April 23, 2007

மௌனங்களும் அர்த்தங்களும்

பேசாத வார்த்தைகளின்
அர்த்தங்களும்,
பேசிய வார்த்தைகளுக்கு இடையேயான
மௌனங்களும்தான்
நம் காதலை மேலும்
உயிர்ப்புள்ளதாக்குகின்றன.

காத்திருப்பு

அழுகிக் கொண்டிருக்கின்றன
வேர்கள்...
கனிகளுக்கு காத்திருக்கின்றன
கைகள்.

தருணங்கள்

முற்றுப்பெற வேண்டிய தருணங்களில்
நீண்டும்,
நீள வேண்டிய தருணங்களில்
முடிந்தும்,
இன்றளவும் உறைந்துபோன
நமது செல்பேசி உரையாடல்களின்
பெரும்பகுதி
"வைத்துவிடட்டுமா" என்று
சொல்லிவிட்டுப் பேசியவைதான்.

நிகழ்

பகிர்ந்து கொள்ள யாருமற்று
நிராகரிப்பின் வலியோடு
கடந்து கொண்டிருக்கிறது நிகழ்.

நிகழ் கொன்ற பாவத்தின்
நிழல் படரும் முதுமையில்
நாம் அழக் காத்திருப்போம்.

சுயம்

நிதானமாய் யோசிக்கையில்
வாழ்தலுக்கான சமரசங்களில்
என்றோ தொலைந்துவிட்டிருந்தது
சுயம்...
சுயமிழந்த எதுவும் பிணம்தான்.

மரணத்தின் கவிதை

மரணத்தைப் பற்றிய
எனது ஜீவனுள்ள கவிதையை
சாகாத ஒருவருக்கு
தயை கூர்ந்து சொல்வீர்களா
யாரேனும்?

சிட்டுக்குருவி

பரந்த வானம்
பறக்கச் சிறகுகள்
ஆனாலும் இருக்கிறது
சிட்டுக்குருவிக்கு
கூடு திரும்ப வேண்டிய
கட்டாயம்.

வழிகள்

பூக்களுக்கிடையேயான
வண்ணத்துப் பூச்சிகளின்
வழிகளை அறிய நேர்ந்தால்
ஒருவேளை
சொர்க்கத்துக்கான வழி
தெரியக் கூடும்.