Thursday, May 10, 2007

பிம்பங்கள்

நாம் அந்தக்குமிழை
உடைத்துவிட்டிருந்த கணத்தில்
நமது பிம்பங்களுக்கு
குழந்தைகள் பிறந்திருந்தன.

நம்மிலும் நமது பிம்பங்கள்
நெடுந்தொலைவு பயணித்துவிட்டிருந்தாலும்
முகங்களில் அலுப்பின் சுவடுகளே இல்லை.

காற்றுக்கும் வழியற்று
கோர்த்துக்கிடந்த நமது விரல்களை
பொருள்சார் உலகின் கருணையற்ற
ஏதோ ஒன்று பிரிக்கின்றது.

இயலாமைக்கு ஒப்புக்கொடுத்தவர்களைப் போல
பிரிவிற்கான படிவத்தில்
குற்ற உணர்வு வழிய கையெழுத்திடுகிறோம்.

பள்ளிக்குச் செல்ல மறுத்து
அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு
அழும் குழந்தையைப் போல்
கதறுகின்றன நமது பிம்பங்கள்.

எனினும் நாம் மிகுந்த
மனத்திண்மை கொண்டவர்கள்...

நெடும் போராட்டத்திற்குப் பிறகு
நமது பிம்பங்களை
பிரிவின் பலிபீடத்தில் ஏற்றி
பலிகொடுத்துவிட்டுத் திரும்புகிறோம்.

நாம் எப்போதும் அமரும் மரத்தடியில்
காற்றுக்கும் வழியற்று
இதழ் கோர்த்துக்கிடக்கின்றன
நமது பிம்பங்கள்.

நாம் செய்வதறியாது திகைக்கிறோம்.

Friday, May 4, 2007

மாநகரம்

மாநகரத்தின்
பிரதான சாலையின் ஓரத்தில்
ஒரு அறுந்த செருப்பென
கேட்பாரற்றுக் கிடக்கிறான் அவன்.

நோய் தின்ற அவனின் மீதியை
மரணம் தின்று கொண்டிருந்தது.

எண்ணற்ற கால்களும்
வாகனங்களுமாய்
அன்பற்று
கடந்து கொண்டிருந்தன அவனை.

வெகுநேரத்திற்குப் பிந்தைய
பெருமழையில்
விறைத்துக் கிடக்கின்றது
அவன் சடலம்...

பெருமழையையும் தாண்டி
மரணம் துப்பிய எச்சில்
மாநகரத்தின் முகத்தில் வழிகின்றது.

அது முன்னிலும் வேகமாய் இயங்குகிறது
அன்பற்றதாக....