Monday, January 25, 2016

கள்ளச் சிரிப்பு

==================

பிரதான வீதியிலிருந்து பிடுங்கி
அடர்ந்த வனத்தில் வீசப்பட்டேன்.

பிரியத்தின் வாசனை மீது
அமிலம் பரவத் தொடங்கியது.

நிழல்களடர்ந்த எனது சாலையில் ...
நெருப்பின் தகிப்பு கவியத் தொடங்கியது.

மீள எத்தனித்தபோது
காலம்
ஒரு சாத்தானைப் போல கள்ளச் சிரிப்பு சிரித்தது.

பிறகு நான்
காலத்திற்கெதிரான வன்மத்தைப்
பருகத் தொடங்கினேன்.

பாதங்களை உதிர்த்துக் கொண்டேன்
விழிகளைப் பிடுங்கி வீசினேன்
உயிரை உருக்கும் ஒரு உன்னத இசைக்கு
செவிகளை மூடிக் கொண்டேன்...
இன்னும் நிறைய இதுபோல்.

பிரியத்தின் வாசனை பரவத் தொடங்கிவிட்ட
ஒரு மழை நாளில்
காலம் மீண்டும் கள்ளச் சிரிப்பு சிரித்தது.

எனது கோப்பையில்
அன்பை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.

அவனும் புளிப்பு முட்டாயும்

===========================


ஒரு காலத்தில் அவனுக்கு 
சில விருப்பங்கள் இருந்தன
சில கனவுகள் இருந்தன
சில ரசனைகளும் இருந்தன 
உண்மையாகவே 
சில திறமைகளும் இருந்தன...

முன்பொரு நாளில்
காலமற்ற ஒரு பொழுதில்
முடிவற்ற ஒரு சமவெளியில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வழித்தடத்தில்
நடக்க விருப்பம் கொண்டிருந்தான்.

ஒரு நிராகரிப்பில்
ஒரு புறக்கணிப்பில்
ஒரு பிரிவில்
ஒரு தகிப்பில்
ஒரு தழுவுதலில்
ஒரு துரோகத்தில்
ஒரு அலைகழிப்பில்
முணுமுணுக்கும்படியான
ஒரு கவிதையை எழுதிவிட முடியும்
என்ற கனவு இருந்தது அவனுக்கு.

அற்புதமான உலகத் திரைப்படங்களும்
ஆகச்சிறந்த புத்தகங்களும்
மகத்தான பாடல்களும்
அவன் சேகரிப்பில் இருந்தன...

காலம் ஒரு புல்லின் நுனி தூரம் கடந்துவிட்டது..

அவன் இப்போது…

கழுத்தில்
ஒரு MNC-யின் அடையாள அட்டையை
தாங்கிக் கொண்டிருக்கலாம்...
குழந்தையின் ஜட்டிக்கு
கிளிப் மாட்டிக் கொண்டிருக்கலாம்..
புறநகரில் ஒரு வீடோ மனையோ
வாங்கும்படியான நிர்பந்தத்தில்
அலைந்து கொண்டிருக்கலாம்
முடியாமல்
Facebook-ல் 
ஒரு கவிதையை post செய்து கொண்டிருக்கலாம்...

ஊருக்கு போவதற்காக
வெள்ளிகிழமை இரவுகளில்
ஆம்னி பஸ்களில் ticket கிடைக்குமா என
தாம்பரம் பேரூந்து நிறுத்தத்தில் அலைந்து கொண்டிருக்கலாம்...

விருப்பங்கள், கனவுகள், ரசனைகள்...

"அத வச்சிக்கிட்டு புளிப்பு முட்டாய் கூட 
வாங்க முடியாது"